1719847020 வங்கிக் கணக்கில் ரிவார்ட் பாயின்ட்ஸ் லிங்ககை கிளிக் செய்ததால் ஒரே வாரத்தில் ரூ.15 லட்சம் இழப்பு @ புதுச்சேரி https://www.hindutamil.in/news/crime/1272861-in-the-name-of-reward-link-15-lakhs-lost-in-one-week-at-puducherry.html?frm=rss_more_article
\t\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t

புதுச்சேரி: வங்கிக் கணக்கில் ‘ரிவார்ட் பாயின்ட்ஸ்’ லிங்க் வந்து, அதை கிளிக் செய்ததால், புதுச்சேரியில் ஒரு வாரத்தில் ரூ.15 லட்சம் வரை இழந்துள்ளனர். எனவே, அந்த லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என்று சைபர் கிரைம் எஸ்எஸ்பி கலைவாணன் தெரிவித்தார்.

வங்கி கணக்கில், ‘ரிவார்ட் பாயின்ட்ஸ்’ லிங்கை அனுப்பி அதை கிளிக் செய்துவைத்து நடக்கும் மோசடி புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. புதுச்சேரியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.15 லட்சம் அளவுக்கு இணையவழி குற்றப் பிரிவு காவல் நிலையத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக சைபர் கிரைம் எஸ்எஸ்பி கலைவாணன் கூறியது: “வங்கியில் இருந்து அனுப்புவது போன்ற மின்னஞ்சல்கள் அல்லது எஸ்எம்எஸ்கள் மூலம் மர்மமான மற்றும் மோசடியான (PHISHING) இணைப்புகளை அனுப்பி கிளிக் செய்ய வைக்கிறார்கள்.

பேராசையில் அதனை கிளிக் செய்தால் வங்கி தகவல்களை திருடி,பணத்தையும் திருடி விடுவார்கள். எனவே கவனமாக இருந்து சந்தேகமான லிங்க் எதையும் கிளிக் செய்யக் கூடாது.எந்த வங்கியும் இதுபோன்ற லிங்குகளை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதில்லை. எனவே, பொதுமக்களுக்கு வரும் மெசேஜ் மற்றும் லிங்கின் உண்மை தன்மையை தெரியாதவர்கள், அருகிலுள்ள தங்களது வங்கி கிளைக்கு சென்று விசாரிப்பதே சிறந்தது. இதை மீறினால் பணமிழப்பு அபாயம் அதிகம் ஏற்படும்.

மோசடி செய்பவர்கள் இணையதளங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் சர்ச் என்ஜின்களை பயன்படுத்திகூட வாடிக்கையாளர்களை ஏமாற்றி, முக்கியத் தவல்களை திருட்டுத்தனமாக சேகரிக்கிறார்கள். எனவே, அதிகாரபூர்வமற்ற இணையதளங்களில் நுழையாமல் இருப்பது நல்லது.

எனவே சற்றும் யோசிக்காமல் மர்மான லிங்குகளை கிளிக் செய்வது, முன் பின் தெரியாத நபர்கள் வங்கி அதிகாரிகள் போல் பேசினால், அந்த நபர்கள் குறித்து விசாரிக்காமல் நம்முடைய வங்கி விபரங்களை பகிர்வது, சமூக வலைத்தளங்களில் அங்கீகரிக்கப்படாத லோன் ஆப்களை பயன்படுத்தி லோன் எடுப்பது, வீட்டில் இருந்தே வேலை லைக் செய்தால் போதும் பணம் தருகிறோம் என்று கூறி வாட்ஸ்அப் மற்றும் டெலிக்ராமில் வரும் செய்திகளை நம்பி பணத்தை முதலீடு செய்வது, முன்பின் தெரியாத மர்ம நபர்கள் கூறும் ஆசை வார்த்தையை நம்பி அங்கீகரிக்க படாத டிரேடிங் ஆப்களை பதிவிறக்கம் செய்து பணம் முதலீடு செய்வது போன்றவற்றை பொதுமக்கள் தவிர்க்கவேண்டும்.

குறிப்பாக OTP என்ற வார்த்தை வந்தவுடன் சற்றும் யோசிக்காமல் அதிலிருந்து விலகி விடுவது சாலச்சிறந்தது. மேலும் சைபர் குற்றங்களில் பாதிக்கப்பட்டோர் சற்றும் நேர விரயம் செய்யாமல் இலவச அழைப்பு எண் 1930 அல்லது cybercrime.gov.in என்ற இணைய முகவரியில் தங்களுடைய புகார்களை தெரிவிக்கலாம்,” என்றார்.

\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t
html செ.ஞானபிரகாஷ் 1719826380 திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 2 தொழிலாளர்கள் ரயில் மோதி உயிரிழப்பு https://www.hindutamil.in/news/crime/1272828-tripur-train-accident-2-dead.html?frm=rss_more_article
\t\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t

திருப்பூர்: திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற கட்டிடத் தொழிலாளர்கள் இருவர் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். ரயில்வே போலீஸார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் காவிலிபாளையம்புதூர் பகுதியில் கட்டிடப் பணி செய்வதற்காக திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (28) மற்றும் சரவணபவன்( 28) ஆகிய இருவரும் திருப்பூரில் தங்கி பணி செய்து வந்தனர். இவர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து அன்றாடம் ரயில்வே தண்டவாளத்தைக் கடந்து டீ குடிக்கச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று (ஜூலை1) காலை 5 மணி அளவில் வழக்கம்போல் டீ குடிக்கச் சென்றுவிட்டு அறைக்கு திரும்பிவரும் போது கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த ரயில் மோதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ரயில்வே போலீஸார் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t
html இரா.கார்த்திகேயன் 1719807600 கும்மிடிப்பூண்டி | போலீஸாரை தாக்கிவிட்டு ஜீப்பில் தப்ப முயற்சி; 4 வடமாநில மாடு திருடர்கள் உட்பட 5 பேர் துப்பாக்கி முனையில் கைது https://www.hindutamil.in/news/crime/1272552-5-people-including-4-north-state-cow-thieves-arrested.html?frm=rss_more_article
\t\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே கண்ணன்கோட்டை கிராமத்தில் பாழடைந்த கோழிப் பண்ணையில் சந்தேகத்துக்கிடமான வகையில் வடமாநில இளைஞர்கள் சிலர் தங்கியிருப்பதாக சில தினங்களுக்கு முன் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீஸார் மேற்கொண்ட தொடர் கண்காணிப்பில் அவர்கள் மீது சந்தேகம் எழுந்ததால், நேற்று முன்தினம் இரவு, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர்கள் வடிவேல் முருகன், டில்லிபாபு ஆகியோர் தலைமையிலான போலீஸார் சம்பந்தப்பட்ட கோழிப் பண்ணையைச் சுற்றி வளைத்தனர்.

இதையறிந்த அந்த கும்பல், கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட சரக்கு ஜீப்பில் தப்பியது. கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியாசக்தி கவரைப்பேட்டை - சத்தியவேடு சாலையில் கண்ணம்பாக்கம் சந்திப்பில், தனது ஜீப்பை குறுக்கே நிறுத்தி அந்த கும்பலை வழி மறித்தார். அப்போது, அந்த கும்பல் சென்ற சரக்கு ஜீப், டிஎஸ்பி ஜீப்பை இடித்துத் தள்ளிவிட்டு, கவரைப்பேட்டை நோக்கி வேகமாகச் சென்றது.

போலீஸார் ஜீப்கள், மோட்டார் சைக்கிள்களில் விரட்டிச் சென்றபோது, வடமாநில கும்பல் குருவராஜகண்டிகை கிராமத்தில் உள்ள தைல தோப்புக்குள் நுழைந்து ஒளிந்துகொண்டது. போலீஸார் அங்கு தீவிரமாகத் தேடிய நிலையில், தைலத் தோப்பிலிருந்து வெளியேறிய அந்த கும்பல் சின்னபுலியூர் வழியாகத் தப்ப முயன்றது.

மீண்டும் போலீஸார் அவர்களை, பெரிய புலியூர், தேர்வாய், தேர்வாய் கண்டிகை சிப்காட் வழியாக விரட்டிச் சென்றனர். அப்போது, சரக்கு ஜீப்பின் பின்புறத்தில் அமர்ந்திருந்த 3 பேர், போலீஸாரின் ஜீப் மீது கற்களை வீசித் தாக்கினர்.

வடமாநில கும்பல், ஊத்துக்கோட்டை காவல் நிலைய எல்லை வழியாகத் தப்ப முயன்றதால், தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீஸார், பாலவாக்கம் பகுதியில் சாலையின் குறுக்கே லாரி ஒன்றை நிறுத்தி, அக்கும்பலுக்காக காத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த வடமாநில கும்பலைச் சேர்ந்தவர்கள், சரக்கு ஜீப்பில் இருந்து கீழே இறங்கி ஆளுக்கு ஒரு திசையாக தப்ப முயன்றனர். அவர்களை போலீஸார் துரத்திச் சென்று துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

திரைப்பட பாணியில் நடந்த போலீஸாரின் இந்த 2 மணி நேர துணிகரப் போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து கைதானவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது:

கைதானவர்கள் ஹரியானா மாநிலம், மேவட் தாலுகாவை சேர்ந்த அஸ்லாம் கான்(44), அல்டாப்(37), சலீம்(32), ஆஷிப்கான் (24) மற்றும் கவரைப்பேட்டை அருகே உள்ள கிளிக்கோடி கிராமத்தை சேர்ந்த திவாகர்(25) என்பது தெரிந்தது.

மாடு திருடுபவர்களான இவர்கள், கடந்த 4 மாதங்களாக பாழடைந்த கோழிப் பண்ணையில் தங்கியபடி, இரவு வேளையில், சரக்கு ஜீப் மூலம் ஆந்திர மாநில பகுதியில் சாலையோரம் சுற்றித் திரிந்த மாடுகளைத் திருடி வந்துள்ளனர். திருடிய மாடுகளை கோழிப் பண்ணையில் அடைத்து வைத்து, 15 மாடுகள் சேர்ந்ததும், கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்து வந்துள்ளனர் என விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பாதிரிவேடு போலீஸார், கைதானவர்களிடம் இருந்து, சரக்கு ஜீப், மாடு பிடி கயிறுகள், கத்திகள், 2 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், பாதிரிவேடு போலீஸார், கைதானவர்களின் குற்ற சரித்திரத்தை ஹரியானா மாநில போலீஸாரிடம் விசாரித்து வருகின்றனர்.

\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t
html செய்திப்பிரிவு 1719807000 சென்னை | டேங்கர் லாரியில் கொண்டு செல்லப்பட்ட பெட்ரோல், டீசலை நூதன முறையில் திருடிய 6 பேர் கைது https://www.hindutamil.in/news/crime/1272539-6-people-arrested-for-stealing-petrol-and-diesel.html?frm=rss_more_article
\t\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t

சென்னை: தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்படும் அரிசி போன்ற இன்றியமையாத அத்தியாவசிய பொருட்கள் கடத்தல், பதுக்கலை தடுத்தல் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் கலப்படத்தை தடுக்க தமிழக காவல் துறையின் சிவில் சப்ளை சிஐடி பிரிவு போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக அப்பிரிவு ஐஜி ஜோஷி நிர்மல் குமார் மேற்பார்வையில் தனிப்படை போலீஸார் திருவள்ளுர் மாவட்டம், மாத்தூர், டெலிகாம் நகர் அருகே கண்காணித்தனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டேங்கர் லாரி மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை சோதனை செய்ததில் டேங்கர் லாரியிலிருந்து கள்ளச் சந்தையில் விற்பதற்காக பெட்ரோல் மற்றும் டீசல்ஆகியவை திருடியது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டுநர்களிடம் விசாரணை செய்ததில் எண்ணூர் டேங்க் முனையத்திலிருந்து கல்பாக்கத்திலுள்ள நீலாசாமி ஏஜென்சிக்கு செல்ல வேண்டிய டேங்கர் லாரியை வழியில் நிறுத்திஅதிலிருந்து பெட்ரோல் திருடியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

மேலும், லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பகுதியில் உள்ள பேரல்களில் சோதனை செய்ததில் தொழிற்சாலைக்கு பயன்படுத்தக் கூடிய ஆயிலை கள்ளச் சந்தையில் விற்பதற்காக சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த விஜயகுமார், சீனிவாசன், வேலாயுதம் ஆகியோர் திருடி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து கள்ளச் சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோலிய பொருட்கள் சுமார் 16,400 லிட்டர் மற்றும் ஒரு டேங்கர் லாரி, ஒரு டாடாஏஸ் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t
html செய்திப்பிரிவு 1719804240 மும்பையில் 72 வயது தொழிலதிபரிடம் ரூ.4 கோடி மோசடி: கேரளாவை சேர்ந்த 2 பேர் கைது https://www.hindutamil.in/news/crime/1272677-72-year-old-businessman-was-defrauded-of-rs-4-crore-in-mumbai.html?frm=rss_more_article
\t\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t

மும்பை: மும்பையில் 72 வயது தொழிலதிபருக்கு மர்ம நபர்கள் போன் செய்து தங்களை காவல் துறை மற்றும் சுங்க அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்தியுள்ளனர். பின்னர், பண மோசடி வழக்கு ஒன்றுடன் அந்தத் தொழிலதிபரின் ஆதார் எண் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்து அவரை கைது செய்ய இருப்பதாக மிரட்டினர்.

இந்த மோசடிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்தத் தொழிலதிபர் அவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து உண்மையான குற்றவாளியைப் பிடிக்க பணம் தர வேண்டும் என்று மோசடியாளர்கள் தொழிலதிபரிடம் தெரிவித்துள்ளனர்.

பயத்தில் அவரும் தன் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.3.98 கோடி பணத்தை மோசடியாளர்கள் கூறிய கணக்குகளுக்கு மாற்றியுள்ளார். பணத்தை அனுப்பிய பிறகு அந்த மோசடியாளர்கள் தரப்பிலிருந்து எந்தத் தகவலும் அவருக்கு வரவில்லை. இதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பது அந்தத் தொழிலதிபருக்கு தெரிய வந்தது. இதையடுத்து மும்பை காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணையில் இறங்கிய மும்பை போலீஸார், கேரளாவைச் சேர்ந்த அனுப் குமார் (45) மற்றும் முகம்மது அபூபக்கர் (29) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.அபூபக்கர் துபாயில் இருந்தபடி, தாய்லாந்து நாட்டு போன் நம்பர் மூலம் பேசி தொழிலதிபரிடம் மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t
html செய்திப்பிரிவு 1719753720 தஞ்சையில் நான்கு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை https://www.hindutamil.in/news/crime/1272281-in-thanjavur-the-national-intelligence-agency-raided-four-places-for-5-hours.html?frm=rss_more_article
\t\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t\t
தஞ்சாவூர் குழந்தை அம்மாள் நகரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்திய அகமது என்பவரின் வீடு.
\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய புலனாய்வு அமைப்பினர் நான்கு இடங்களில் இன்று காலை ஆறு மணி முதல் நடத்திய சோதனை நிறைவு பெற்றது. சோதனையின் முடிவில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட மின்னணு ஆவணங்களை அதிகாரிகள் விசாரணைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.

தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்போடு தொடர்பு இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், தேசிய புலனாய்வு முகமையின் டிஎஸ்பி ராஜன் தலைமையிலான அதிகாரிகள், தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனை காலை 6 மணிக்கு தொடங்கி 11:30 மணி வரை நடைபெற்றது. அதேபோல் சாலியமங்கலம் பகுதியில் முஜிபுர் ரகுமான், அப்துல் காதர் ஆகியோரது வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும், தஞ்சாவூர் அருகே மானாங்கோரையில் ஷேக் அலாவுதீன் என்பவரது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த இரண்டு இடங்களில் நடைபெற்ற சோதனை காலை 11:30 மணியளவில் நிறைவுற்றது. சோதனையின் முடிவில் லேப்டாப், பென்டிரைவ் உள்ளிட்ட முக்கிய மின்னணு ஆவணங்களை விசாரணைக்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றார்கள். சோதனையின் போது பாதுகாப்புக்காக உள்ளூர் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t
html வி.சுந்தர்ராஜ் 1719750720 கடலூரில் அதிமுக நிர்வாகி நடுரோட்டில் வெட்டிப் படுகொலை - குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைப்பு https://www.hindutamil.in/news/crime/1272277-aiadmk-leader-hacked-to-death-in-the-middle-of-the-road-in-cuddalore.html?frm=rss_more_article
\t\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t

கடலூர்: கடலூரில் அதிமுக நிர்வாகி நடுரோட்டில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலூர் வண்டிப்பாளையம் ஆலை காலனி பகுதியைச் சேர்ந்தவர் புஷ்பநாதன் (45). முன்னாள் கவுன்சிலரான புஷ்பநாதன், அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாக உள்ளார். இந்த நிலையில் நேற்று(ஜூன் 29) நள்ளிரவு புஷ்பநாதன் புதுவண்டிப்பாளையம் சூரசம்ஹார தெருவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது அவரை பின்தொடா்ந்து மோட்டாா் சைக்கிளில் சென்ற மர்ம கும்பல் ஒன்று புஷ்பநாதனை வழிமறித்து ஓட ஓட சரமாரியாக அாிவாளால் நடுரோட்டில் வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் மர்ம கும்பல் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்த தகவல் அறிந்த கடலூர் டிஎஸ்பி பிரபு தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். உயிரிழந்த புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கடலூா் முதுநகா் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? அவரை கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைப் பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் விரைவில் பிடித்து விடுவோம் என்று தனிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.

\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t
html க.ரமேஷ் 1719745020 பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் ரூ.2 கோடி மதிப்புள்ள நகை-பணம் திருட்டு: கார் ஓட்டுனர் கைது https://www.hindutamil.in/news/crime/1272272-rs-2-crore-worth-of-jewelery-theft-from-share-market-businessman.html?frm=rss_more_article
\t\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t

சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் திருடிய வழக்கில் அவரது வீட்டில் பணி செய்த டிரைவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை எம்ஆர்சி நகர் சத்திய தேவ் அவன்யூவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கோபாலகிருஷ்ணன். பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இவரது வீட்டில் சரவணன் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கார் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவர் மீது கோபாலகிருஷ்ணன் அதிக நம்பிக்கை வைத்திருந்தார். இந்த நிலையில் சரவணனின் செயல்பாடுகள் சரியில்லாததால் கடந்த 27ம் தேதி அவரை பணியிலிருந்து கோபாலகிருஷ்ணன் நீக்கியுள்ளார்.

வழக்கத்திற்கு மாறான அவரது நடத்தையை சந்தேகித்து, வீட்டில் உள்ள லாக்கர் சாவியை தேடிய போது காணவில்லை. இதையடுத்து வீட்டு லாக்கரை உடைத்து பார்த்தபோது அதிலிருந்த 250 பவுன் நகை 10 கிலோ வெள்ளி பொருட்கள் 25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இவற்றின் மொத்த மதிப்பு 2 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக கோபாலகிருஷ்ணன் பட்டினம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் தனது வீட்டில் டிரைவராக பணியாற்றிய சரவணன் மீது சந்தேகம் இருப்பதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார் அசோக் நகர் பகுதியை சேர்ந்த டிரைவர் சரவணனை போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t
html இ.ராமகிருஷ்ணன் 1719731880 செல்போன் பறித்தவர்களை பிடித்தபோது போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது https://www.hindutamil.in/news/crime/1272190-2-arrested-attacks-policeman-with-sickle-while-snatching-mobile.html?frm=rss_more_article
\t\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t\t
கோப்புப்படம் | உள்படம்: திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் காவலர் அப்துல் காதர்
\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t

திருச்சி: திருச்சியில் செல்போன் பறிக்க முயன்றவர்களை தேடிச் சென்ற போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி கோட்டை சட்டம்-ஒழுங்கு காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராக பணியாற்றி வருபவர் அப்துல் காதர் (34). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு சிந்தாமணி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர், சிலர் தன்னிடம் செல்போன் பறிக்க முயன்றதாக புகார் தெரிவித்தார்.

இருவரிடம் விசாரித்தபோது.. இதையடுத்து, ஓடத்துறை பகுதிக்கு சென்ற அப்துல் காதர், அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த இருவரிடம் விசாரித்துள்ளார்.

அப்போது திடீரென ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அப்துல் காதரை கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் வெட்டியுள்ளார். பின்னர் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். பலத்த காயமடைந்த அப்துல் காதர், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த சாரதி (19), புலி சரவணன் (என்ற) சரவணன் (22) ஆகியோரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t
html செய்திப்பிரிவு 1719731160 முகநூலில் பழகிய பெண்ணிடம் ரூ.38 லட்சம் மோசடி: அரக்கோணம் இளைஞர் கைது https://www.hindutamil.in/news/crime/1272192-facebook-fraud-arakkonam-youth-arrested-for-cheating-woman.html?frm=rss_more_article
\t\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t\t
கோப்புப்படம் | உள்படம்: முத்து
\t\t\t\t\t\t\t
\t\t\t\t\t\t\t

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, முகநூலில் நிக்கோலஸ் ஆண்ட்ரூஸ் மோரீஸ் என்ற பெயரில் செயல்பட்ட நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த நபர் பரிசு பார்சல் அனுப்புவதாக பெண்ணிடம் தெரிவித்துள்ளார். ஓரிரு நாட்களில் அப்பெண்ணை செல்போனில் அங்கீதாஎன்ற பெயரில் ஒருவர் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.

சுங்கத் துறை ஊழியர் போல.. சுங்கத் துறை அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறிய அவர், 70,000 பவுண்ட்ஸ் பணம், நகை மற்றும் ஐபோன் ஆகியவை பார்சலில் வந்துள்ளதாகவும், பார்சலைப் பெறுவதற்கு செயலாக்க கட்டணம், டெலிவரி கட்டணம், ஜிஎஸ்டி, கஸ்டம்ஸ் உள்ளிட்டவற்றுக்கு பணம் தர வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இதை நம்பிய அந்தப் பெண் பல தவணைகளாக, பணம் அனுப்பும் செயலிகள் மூலம்மொத்தம் ரூ.38,19,300 அனுப்பியுள்ளார். ஆனால் பார்சல் வந்து சேரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்தப் பெண், சைபர் குற்றத் தடுப்புப் பிரிவில் புகார் செய்தார்.

ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தியதில், வேலூர் மாவட்டம் அரக்கோணம் அக்கச்சிகுப்பம் பகுதியைச் சேர்ந்த முத்து (32) என்பவர், இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் பதுங்கியிருந்த முத்துவை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

\t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t\t \t\t\t\t\t\t
html செய்திப்பிரிவு