1720252749 தமிழகத்தில் வரும் 12-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு https://www.maalaimalar.com//news/state/tamil-news-imd-inform-next-6-days-weather-update-727567

சென்னை :

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32°-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26°-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு வேளையில், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27°-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்

இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

html 1720252434 சமூகநீதிக்கு செய்த துரோகத்திற்கு திமுக அரசு மன்னிப்பு கோர வேண்டும்- ராமதாஸ் https://www.maalaimalar.com//news/state/dmk-government-should-apologize-for-its-betrayal-of-social-justice-ramadoss-727566

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு எந்த சமூகப் பிரிவினரையும் கொண்டு நிரப்பக் கூடாது என கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் பிறப்பித்த ஆணை திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட சமூக அநீதி போக்கப்பட்டிருக்கிறது.

கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம் ஜூலை 2&ஆம் நாள் பிறப்பித்த ஆணையில் ''கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பிற்படுத்தபட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்து, அவற்றை நிரப்ப சம்பந்தப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்பலாம். அதேநேரத்தில் பட்டியலின/ பழங்குடியின/ மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது'' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்லூரிக் கல்வி இயக்குனரின் ஆணை சமூகநீதிக்கு எதிரானது என்பதை சுட்டிக்காட்டி கடந்த 3-ஆம் தேதி நான் வெளியிட்ட அறிக்கையில்,'' பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடங்களை நிரப்ப, அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில், அந்த இடங்களை பட்டியலின/பழங்குடியின மாணவர்களைக் கொண்டு நிரப்புவது சரியானது தான். அதன் மூலம் மாணவர் சேர்க்கை இடங்கள் வீணாவது தடுக்கப்படும். இதே அளவுகோல் தான் பட்டியலின/பழங்குடியின மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களுக்கும் பின்பற்றப்பட வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை நிரப்ப அந்த வகுப்புகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத நிலையில் பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைக் கொண்டு அந்த இடங்களை நிரப்ப அனுமதிப்பது தான் சரியானதாக இருக்கும். அதற்கு மாறாக, காலியாக உள்ள பட்டியலின/பழங்குடியினருக்கான இடங்களை வேறு பிரிவினரைக் கொண்டு நிரப்பக் கூடாது என்றால், அந்த இடங்கள் காலியாகவே கிடக்கும்" என்று கூறியிருந்தேன்.

அதைத் தொடர்ந்து தமது ஆணையை திரும்பப் பெற்றுள்ள கல்லூரிக் கல்வி இயக்குனர் கார்மேகம், ஏற்கனவே நான் சுட்டிக்காட்டியிருந்த 22.05.2024-ஆம் தேதியிட்ட உயர்கல்வித்துறை அரசாணை எண் 110-இன்படி, பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் காலியாக இருந்தால் அந்த இடங்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/சீர்மரபினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். இது பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

 

அரசு கல்லூரி மாணவர் சேர்க்கையில் சமூகநீதிக்கு துரோகம் செய்த திமுக அரசு, பொதுவெளியில் அம்பலப்பட்டதால் அதன் தவறை இப்போது திருத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், இது மட்டுமே போதுமானதல்ல. மாணவர் சேர்க்கை குறித்து ஏற்கனவே தெளிவான வழிகாட்டுதல்களுடன் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மாற்றி பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக கல்லூரிக் கல்வி இயக்குனர் ஆணை பிறப்பித்தது ஏன்? அவ்வாறு செய்ய அவரைத் தூண்டியது யார்? இதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

சமூக நீதிக்கு துரோகம் இழைக்க முயன்றதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும். கல்லூரிக் கல்வி இயக்குனரை அப்பதவியிலிருந்து உடனடியாக நீக்கி விட்டு, சமூக நீதியில் அக்கறைக் கொண்ட ஒருவரை அந்தப் பதவியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

html 1720251934 ஆம்ஸ்ட்ராங் மரணம் அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பு- உதயநிதி ஸ்டாலின் https://www.maalaimalar.com//news/state/minister-udhayanidhi-stalin-says-biggest-disaster-on-the-political-scene-727563

சென்னை:

திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங், சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் - வேதனையும் அடைந்தேன்.

அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்றி ஏராளமான இளைஞர்களின் கல்விக்காகவும் - ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் களத்தில் உழைத்த ஆம்ஸ்ட்ராங்க் மரணம், ஒடுக்கப்பட்டோருக்கான அரசியல் தளத்தில் மிகப்பெரிய பேரிழப்பாகும்.

இந்தக் கொடுங்குற்றச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல்துறை நேற்று இரவு கைது செய்துள்ளது. மேலும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் இந்தச் சூழலில், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர நம்முடைய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள்.

சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் – குடும்பத்தினர் – நண்பர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

html 1720250777 அ.தி.மு.க.வை தொடர்ந்து விமர்சித்தால்... அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுத்த ஆர்.பி.உதயகுமார் https://www.maalaimalar.com//news/state/tamil-news-rb-udhayakumar-warns-annamalai-727559

மதுரை:

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை நாகரிகமில்லாத அரசியல் பண்பாட்டை தொடர்ந்து விதைத்து வருகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலைக்கு என்ன திடீர் அக்கறை.

டெல்லியில் பிரதமர் மோடியின் அருகில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை உட்கார வைத்து விட்டு, தமிழகத்தில் அ.தி.மு.க.வின் அடித்தளத்தை அசைத்து பார்க்கிற வேலையில் அண்ணாமலை தொடர்ந்து ஈடுபட்டாரா? இல்லையா? என்று மனசாட்சியை தொட்டு சொல்லட்டும்.

அ.தி.மு.க.வை பற்றி எங்களை போன்ற தொண்டர்களுக்கு இல்லாத கவலை அண்ணாமலைக்கு ஏன் வருகிறது. அண்ணாமலை அ.தி.மு.க. தொண்டரா, பா.ஜனதா தொண்டரா? ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழ தேவையில்லை. அண்ணாமலை போன்றவர்களின் அனுதாபம் அ.தி.மு.க.வுக்கு ஒருபோதும் தேவையில்லை.

பாராளுமன்ற தேர்தலில் கோவையில் கோடிக்காணக்கான பணத்தை வாரி இரைத்தும் அண்ணாமலையை மக்கள் நிராகரித்து விட்டார்கள். வாரணாசியில் 2014, 2019-ம் ஆண்டு தேர்தல்களில் பெற்ற வாக்கை விட குறைவான வாக்குகளையே இம்முறை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

அண்ணாமலை போன்ற தகுதி இல்லாத, அரைவேக்காடு தனமான, பேராசை கொண்ட நபர்களால் தான் பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சி தயவில் பா.ஜ.க. மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

அ.தி.மு.க. வளர்ச்சியை, எடப்பாடி பழனிசாமியின் வளர்ச்சியை தாங்கி கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலில் வார்த்தையை கொட்டுகிறார் அண்ணாமலை. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என்று பேசிய அண்ணாமலை அந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும். இனியும் அ.தி. மு.க. தொண்டர்களை சீண்டிப்பார்க்க வேண்டாம்.

பா.ஜ.க. என்ற தன்கட்சியை அண்ணாமலை வளர்த்துக்கொள்ளட்டும். அ.தி.மு.க.வை பற்றி அண்ணாமலை கவலைபட வேண்டாம் . அ.தி.மு.க.வை இனி விமர்சித்தால் அண்ணாமலையை எதிர்த்து சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட எந்த போராட்டத்திற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் என்ன விளைவுகளை அண்ணாமலை எதிர்கொள்வார் என்று தெரியாது. அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது. ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆன்மா காப்பாற்றும். இது சத்தியம்.

அண்ணாமலை அல்ல, எந்தக்கொம்பனாலும் அ.தி.மு.க.வை அழிக்க முடியாது. இது அம்மாவின் ஆன்மா மீது சத்தியம். அண்ணாமலைக்கு ஒரு எச்சரிக்கையாகவே சொல்கிறேன். அ.தி.மு.க. தொண்டர்கள் கொதித்து எழுந்தால் அண்ணாமலை போன்றவர்கள் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள். நாவடக்கம் இல்லாத அண்ணாமலை தரம் தாழ்ந்து பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மோடி பிரசாரம் செய்தும் ஒரு இடம் கூட பிடிக்கவில்லை. அண்ணாமலை போன்றவர்களால் தான் இன்றைக்கு பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

html 1720250571 ஆம்ஸ்ட்ராங் படுகொலை அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது- கனிமொழி https://www.maalaimalar.com//news/state/armstrong-murdered-is-shocking-says-kanimozhi-727557

சென்னை:

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு நேற்று இரவு வெட்டி கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

அவரது குடும்பத்தினர் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

html 1720249996 விக்கிரவாண்டியில் தி.மு.க.-நாம் தமிழர் கட்சியினர் மோதல் https://www.maalaimalar.com//news/state/dmk-naam-tamilar-katchi-clash-in-vikravandi-727552

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட தொரவி கிராமத்தில் தி.மு.க.வினர் நேற்று மாலை பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் பிரசாரத்தில் ஈடுபட திரவுபதி அம்மன் கோவில் அருகே ஒன்று திரண்டு நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியில் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டு சென்றனர். தி.மு.க.வினர் நிற்பதை பார்த்த நாம் தமிழர் கட்சியினர், அங்கே நின்று பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது தி.மு.க.வை தாக்கி பேசியதால் தி.மு.க.வினருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு, தி.மு.க., நாம் தமிழர் கட்சியினரை சமாதானப்படுத்தினர். இருந்த போதும் போலீசாரின் முன்னிலையிலையே இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் நெட்டித் தள்ளிக்கொண்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

html 1720249858 146 பழங்குடியின இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை- முதலமைச்சர் வழங்கினார் https://www.maalaimalar.com//news/state/cm-mk-stalin-provided-146-tribal-youths-given-employment-order-727551

சென்னை:

தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பட்டப்படிப்பு, பொறியியல், தொழிற் நுட்பக்கல்வி, ஐ.டி.ஐ. படித்து வேலையில்லாமல் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் வாழ தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் திட்டம் வகுக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், மலைப்பகுதிகளில் இயங்கி வரும் அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், துறைச் சார்ந்த மாவட்ட திட்ட அலுவலர், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மலைப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு நேரடியாக சென்று, தமிழ்நாடு அரசின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பழங்குடியின வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் 450 நபர்களை திரட்டி திருச்சி, சேலம் மற்றும் சென்னை மாவட்டங்களில் வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. அக்கூட்டத்தின் முடிவில் தகுதிவாய்ந்த 200 பழங்குடியின இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

13.2.2024 அன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் முன்னிலையில் தேர்வு செய்யப்பட்ட 200 பழங்குடியின இளைஞர்களுக்கு பயிற்சிக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

பயிற்சி ஆணைகள் பெற்ற 200 பழங்குடியின இளைஞர்கள், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள பயிற்சி நிறுவனத்தின் மூலம் மூன்று மாதக்காலம் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டது.

பயிற்சியின்போது அந்த இளைஞர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் அனைத்தும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் வழங்கப்பட்டது.

திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெற்ற இளைஞர்களில், 146 இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனமான ரானே ஆட்டோ மோடிவ் இந்தியா லிமிடெட் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள தலைச் சிறந்த இந்திய நிறுவனங்களின் மூலம் நேர்முக தேர்வுகள் நடத்தப்பட்டு அவர்களின் கல்வித்திறன் மற்றும் தனிப்பட்ட திறமைகளின் அடிப்படையில் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் வழங்கி, வாழ்த்தினார்.

பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்ட 146 இளைஞர்களில், 106 ஆண்கள் மற்றும் 40 பெண்கள் ஆவர்.

html 1720249635 விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்டு இருந்தால் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும்- கே.சி. பழனிசாமி https://www.maalaimalar.com//news/state/in-the-current-situation-if-admk-is-contesting-in-vikravandi-constituency-727550

கோவை:

முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி கோவையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கோவையில் கடந்த மாதம் என்னை பற்றி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிய கருத்து குறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். இந்த வழக்கில் இன்று ஆஜர் ஆனேன். நேற்றும் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார். அவர் ஒரு கட்சியின் தலைவர் என்பதை மறந்து தொடர்ந்து கிளைச் செயலாளர் போல் செயல்படுவதையே காட்டியுள்ளார்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. 3-வது இடத்தை பிடித்தது. தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை 2-வது இடம் பிடித்தார். ஆனால் இதற்கு முன்பு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் வாங்கிய வாக்குகளை விட 50 ஆயிரம் வாக்குகள் அண்ணாமலை குறைவாக தான் பெற்றுள்ளார் என்று கூறி உள்ளார். சி.பி. ராதாகிருஷ்ணன் போட்டியிட்ட போது அ.தி.மு.க. வெற்றி பெற்றிருந்தது.

இதை மறந்து எடப்பாடி பழனிச்சாமி இவ்வாறு கூறியிருப்பது தி.மு.க.வின் வெற்றிக்கு மகிழ்ச்சியை தெரிவிப்பது போல் உள்ளது. தேர்தலில் 2 லட்சம் வாக்குகள் குறைந்ததற்காக எடப்பாடி பழனி சாமி வருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

ஒரு கட்சியின் தலைவர் என்பவர் அனைவரையும் அரவணைத்து சென்று கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பவராக இருக்க வேண்டும். யாருக்கு என்ன பதவி கொடுப்பது, யாருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்குவது என்று முடிவு செய்பவராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சீர் குலைந்து வருகிறது. நெல்லையில் காங்கிரஸ் பிரமுகர் கொலை, நேற்று முன்தினம் சேலத்தில் அ.தி.மு.க. நிர்வாகி, நேற்று சென்னையில் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என தொடர் கதையாகி வருகிறது. இந்த விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்து எடப்பாடி பழனிசாமி போராட்டம் நடத்த வேண்டும். கள்ளச்சாராய சாவு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ள இந்த நேரத்தில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட்டு இருந்தால் வெற்றி பெற்றிருக்கும்.

போட்டியிடாததன் மூலம் அ.தி.மு.க. ஓட்டுக்களை பா.ம.க.விற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எடப்பாடி பழனிசாமி மாற்றி விட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

html 1720249242 அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் குறைப்பு- அன்புமணி கண்டனம் https://www.maalaimalar.com//news/state/anbumani-ramadoss-condemns-reduction-in-posts-of-physical-education-teachers-in-government-schools-727545

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிக்கையில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 33 சதவீதம் வரை குறைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை வளர்க்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மழுங்கடிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம், உடற்கல்வி பாடப்பிரிவில் மாணவர்களை முழுமையாக விளையாட அனுமதிக்க வேண்டும்; உடற்கல்வி வகுப்புகளை வேறு ஆசிரியர்கள் யாரும் கடன் வாங்கக் கூடாது என்று கூறி வருகிறார். ஆனால், அவரது நண்பர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி அமைச்சராக இருக்கும் பள்ளிக்கல்வித் துறையோ, உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆணையிட்டுள்ளது. இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா?


பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும்.

மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

html 1720248570 தமிழகத்தில் கொலை, கொள்ளை சாதாரணமாகிவிட்டது- அண்ணாமலை https://www.maalaimalar.com//news/state/murder-and-robbery-become-normal-in-tn-says-annamalai-727544

சென்னை:

சென்னை வானகரத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை, தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதி வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

* சுவையான மாம்பழம் இருக்கும் மரத்தில் கல்லடி படத்தான் செய்யும்.

* தமிழகத்தில் பாஜகவினர் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது.

* தமிழகத்தில் கொலை, கொள்ளை என்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது.

* நேற்று தேசிய கட்சியின் மாநிலத்தலைவரை அவரது வீட்டு வாசலில் வைத்து கூலிப்படையினர் வெட்டி கொலை செய்துள்ளனர்.

* தமிழகத்தில் கள்ளச்சாராயம் என்பது ஆறு போல ஓடி கொண்டிருக்கிறது.

* தமிழகத்தில் சாதாரண மனிதனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது என்று கூறினார்.

html 1720248440 புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திமுக உண்ணாவிரத போராட்டம் https://www.maalaimalar.com//news/state/dmk-hunger-strike-demanding-withdrawal-of-new-criminal-laws-727543

இந்திய தண்டனைச் சட்டம் (IPC) தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

போராட்டத்தில் பேசிய துரைமுருகன், ''ஒன்றிய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்று சட்டங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. நாக்கில் தர்ப்பைப் புல்லை தேய்த்தாலும் இந்த வார்த்தைகள் வாயில் வராது. இந்த கொடுமை வேண்டாம் என்பதற்காகதான் ஆதியிலிருந்து இந்தியை நாம் எதிர்க்கிறோம்" என்று பேசினார்.

இதனையடுத்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "பிரிட்டிஷ் காலனிய சட்டங்களை தூக்கி எறிவதாக சொல்லித்தான் இச்சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். உண்மையில் காலனிய சட்டங்களை இயற்றிய மெக்காலேவுக்கும் சர் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸுக்கும் இவர்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். 90 முதல் 95 சதவிகிதம் வரை அந்தச் சட்டங்களிலிருந்து copy அடித்து இதில் ஒட்டி வைத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

html 1720248378 ஜெயக்குமார் வழக்கு: காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் 2 மணி நேரம் விசாரணை https://www.maalaimalar.com//news/state/jayakumar-marmachau-case-is-heating-up-cpcid-to-congress-leaders-727542

திசையன்விளை:

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த கே.பி.கே.ஜெயக்குமார் கடந்த மே மாதம் 4-ந்தேதி உடல் எரிக்கப்பட்ட நிலையில் கரைசுத்து புதூரில் அவரது வீட்டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

அவரது சாவில் மர்மம் நீடித்து வந்த நிலையில் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு கோணங்களில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு முத்தரசியும் நெல்லைக்கு நேரடியாக வருகை தந்து விசாரணையை மேற்கொண்டார்.

ஆனாலும் இதுவரை பெரிதாக துப்பு துலங்கவில்லை. ஜெயக்குமாரின் மர்மச்சாவு குறித்த சி.பி.சி.ஐ.டி. விசாரணை மந்த கதியிலேயே இருக்கிறது. இதற்கிடையே நேற்று திசையன்விளை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் மாநில மனித உரிமைத்துறை நிர்வாகி விவேக் முருகன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் மருதூர் மணிமாறன் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் பாளை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர். 2 பேரிடமும் 4 அதிகாரிகள் கொண்ட குழு தலா 2 மணி நேரம் தனித்தனியாக விசாரணை நடத்தியது.

அப்போது அவர்களிடம் ஜெயக்குமாருக்கு ஏதேனும் பெண்களுடன் தொடர்பு இருந்ததா? அவருடன் யாரேனும் அடிக்கடி உடன் வருவார்களா? அவர் தனது மரண வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்களுடன் ஜெயக்குமாருக்கு எந்த வகையில் பழக்கம் இருந்தது என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு 2 பேரும் கூறிய தகவல்களை வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

இதனால் கடந்த சில நாட்களாக விசாரணை மந்தமாக நடந்து வந்த நிலையில் இன்று மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இதனிடையே இன்று சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் தலைமையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் திசையன்விளையில் முகாமிட்டுள்ளனர். அவர்கள் இன்று அதிகாலையிலேயே ஒரு வேன் மற்றும் 3 ஜீப்புகளில் திசையன்விளை சென்று விசாரணையை தொடங்கினர்.

செல்லும் வழியில் மணியன்குடி என்ற கிராமத்தில் வாகனத்தை நிறுத்தி விசாரித்து விட்டு பின்னர் கரைசுத்துபுதூர் நோக்கி விரைந்தனர். சுமார் 30 போலீசார் வந்துள்ளதால் திசையன்விளை சுற்றுவட்டார பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.

html